Friday, May 25, 2012

வியாபாரக் கல்வி




கல்வி நிறுவனங்களின் - வியாபார சூழ்ச்சியும்,

அரசின் - போலி சாதனையும்,

பெற்றோர்களின் - அறியாமையும்,

மாணவர்களின் - தற்காலிக புகழ் மயக்கமும்,

நாளேடுகளில் நகைகிறது,

10வது, 12 வது,
தேர்வு முடிவுகளுக்குப் பின்.

Tuesday, May 1, 2012

நலிவடைந்த நாற்றங்கால்


பூமியில் உள்ள உயிரினங்களில் பரிணாம வளர்ச்சியின் உச்சத்தில் உள்ள உயிரினம் மனித உயிரினம், ஆறறிவு, சிந்தனை, உணர்ச்சிகள், பகுத்தறிவு, போன்ற பல காரணங்களைச் சொல்லலாம்.ஆனால் இன்று நடப்பவைகளைக் கண்டால் மீண்டும் மிருகமாக மாறுகிறோமோ,என்று ஐயம் எழுகிறது.பாலுட்டி வகைகளிலே இரண்டு கருவறை கொண்ட உயிரினம் மனித உயிரினம் மட்டும் தான். மற்றவை எல்லாம் முழுவளர்ச்சி அடைந்து பிறக்கின்றன.ஆனால் மனிதகுழந்தை மட்டும் தான் பாதி வளர்ச்சியில் பிறக்கிறது,மீதி சூழ்நிலை என்னும்இரண்டாம்கருவறையில் வளருகிறது.எனவே தாயின்கருவறை,சூழ்நிலைக்கருவறை ,என இரண்டு கருவறைகள் உள்ளன. சூழ்நிலை என்னும் இரண்டாம் கருவறை இன்று மலடாக மாறிவருகிறதா?இல்லை,சிதைந்துவருகிறதா?என்று தெரியவில்லை.ஒரு வேளை மனிதஇனம் அழிவின் விளிம்பில் உள்ளதா?

இரண்டாம் கருவறையில் தொப்புள் கொடிபோல்,குழந்தைக்குத் தேவையான அறிவையும், குணங்களையும் கொடுப்பவர்கள்,பெற்றோர்கள் ஆசிரியர்கள், அரசு, ஊடகங்கள், மற்றும் இயற்கை.இதில் எதாவது ஒன்று குறைப்பட்டுபோனால் மற்றதை வைத்து சமாளித்துக்கொள்ளலாம்,எல்லாமே குறைப்பட்டுபோனால்,அந்த கருவறையில் வளர்ந்த குழந்தை சமூகத்தை சீர்குலைக்கும் வன்முறையாளனாகவோ அல்லது சமுதாயத்தில்ஒதுக்கப்பட்ட தேவையில்லாத ஆளாகவோ,அல்லது தற்கொலை செய்து கொண்டோ, அல்லது சமுதாயத்தால் கொலை செய்யபட்டோ, உதிர்ந்து போகின்றனர்.

அன்பு, பாசம், நல்லொழுக்கம், சுயதூய்மை, சகிப்புதன்மை,விட்டு கொடுக்கும் மனப்பான்மை, உறவுகளோடு சேர்ந்து வாழுதல்,கருணை உள்ளம் போன்ற நல்ல குணங்கள் பெற்றோரிடத்தில் தான் கற்கின்றனர். ஆனால் இன்று உள்ள ஒரு பகுதி பெற்றோர்கள் பொருள் சேர்ப்பதற்காக பணம் என்னும் மூலதனத்தை முதன்மைபடுத்தி, பணம் சேர்க்கும் போட்டியில் உள்ளதால் தன் குழந்தைகளை கவனிக்க நேரமில்லை, அன்புகாட்ட நேரமில்லை, மனம் விட்டுப்பேச நேரமில்லை.இப்படி,எதற்கும் நேரமில்லாமல்,மேலே சொன்ன நல்ல குணங்கள் எல்லாம் இன்று பணம் மற்றும் பரிசு பொருட்களாய் காட்சியளிகிறது. எனவே தம் குழந்தைகளையும் பொருள் ஈட்டுவதற்கான இயந்திரமாக மாற வேண்டும் என நினைக்கிறார்கள்,இதனால் தம் குழந்தைகளை எந்த பள்ளியில் சேர்த்தால் அதிக மதிப்பெண்கள் கிடைக்கும், எந்த கல்லூரியில் சேர்த்தால் நல்ல வேலை கிடைக்கும், எந்த நிறுவனத்தில் சேர்ந்தால் அதிக சம்பளம் கிடைக்கும் என கடிவாளம் போட்ட குதிரை போல் பணத்தை நோக்கி ஓடச் செய்கின்றனர்.வசதி உள்ளவர்கள் இப்படி என்றால் வசதியற்ற, படிப்பறிவற்ற பெற்றோர்கள் வயிற்றுபிழைப்புக்கே வதைபட்டு நாள் முழுவதும் வேலை செய்து,சோர்ந்துபோய் வீட்டிற்கு வந்தால்.எப்படி, குழந்தைகளிடத்தில் அன்பு, பாசம் காட்ட முடியும்,மனம் விட்டு பேச முடியும், வாழ்க்கையே போர்களமாக மாறிபோனவர்களுக்கு தம் குழந்தையும் சக போர்வீன் போல்தான் காட்சியளிப்பான், இதற்கு எல்லாம் காரணம் ஒரு சிலரின் பணப் பேராசையே.அதாவது முதலாளித்துவம்.

இன்னும் பல பெற்றோர்கள் வாழ்வின் உண்மை நிலையான,இன்பம் துன்பம், உயர்வு தாழ்வு, பாசம் பகை, வறுமை வசதி, உழைப்பு சோம்பல், போன்ற வாழ்வின் இரண்டு நிலைகளையும் அறிவுறித்தி குழந்தைகளின் மனதை ஒரு கற்சிற்பத்தை போல் அழகாக்கி மெருகேற்றி பளபளக்க செய்யாமல். இன்பம் , சுகம் , உயர்வு , பாசம் , அன்பு , வசதி போன்ற வாழ்வின் மகிழ்ச்சியான நிலையை மட்டும் அறிவுறுத்தி,மற்றதை மறைத்து, அவர்களின் மனதை ஒரு கண்ணாடியை போல் பளபளக்க செய்கின்றனர். இத்தகையை குழந்தைகள்,வாழ்வில் வரும்,ஒரு சிறிய துன்பம் , ஏமாற்றம் , தாழ்வு போன்றவற்றைக் கூட தாங்கிக்கொள்ள முடியாமல் கண்ணாடியின் மேல் கல் விழுந்தாலே உடைந்து சிதருவதுபோல் உடைந்து விடுகின்றார்கள்.

இன்னும் சிலர்,கணவன் மனைவிக்கிடையே சரியான புரிதல் இல்லாமல் பிரிந்து வாழ்வதால் அவர்களின் குழைந்தைகள்சாலையோரத்தில் விதைக்கப்பட்ட மரங்களை போல் ஆதரவு இல்லாமல் வளர்கின்றன.

இத்தகையை குழைந்தைகளை கல்வியாவது நல்வழி படுத்துமா என்று பார்த்தல் அதுவும் இல்லை,நமது கல்வி முறையை ஆராய்ந்தால் தெரியும். அன்று ஆங்கிலேயர்கள்,அவர்களுக்கு அடிமை வேலை செய்வதற்கு மனித எந்திரங்களை உருவாக்க அவர்களால் கொண்டுவரப்பட்ட கல்வி முறை. இன்று, பன்னாட்டு நிறுவனங்களுக்கும்,பெரும் பணக்காரர்களுக்கும், அதே அடிமை வேலை செய்வதற்கு இன்னும் நவீன மனித எந்திரங்களை உருவாக்கும் முறையாக உள்ளது.

மக்களும் தான் ஒவ்வொரும் முதலாளியாக வேண்டும் என்று.பணத்தை முதல்நிலைப்படுத்தி,சுயநலத்துடனும்,பேராசையுடனும் பணம் சம்பாதிக்கும் போடியில் பங்கு கொண்டு உள்ளன. இவற்றை பயன்படுத்தி தனியார் கல்வி நிறுவனங்களும்,கார்ப்பிரேட் நிறுவனங்களை போல் முதலீடு செய்து லாபம் ஈட்டுகின்றனர்.

அதிக லாபம் பெறுவதற்காக பல மாயை செய்கின்றன.பணம் கொடுக்கும் பெற்றோர்களை திருப்திபடுத்த வேண்டும்,அதற்காக அடுக்குமாடி கட்டிடங்கள், மாணவர்களிடம் ஒழுக்கம் என்ற பெயரில் அடக்கு முறைகள், புத்தகத்தில் உள்ளதை அப்படியே நகல்எடுக்க வைத்து மதிப்பெண் பெறவைதல்,குறைகளை வரிசைபடுத்தி வாழ்கையின் மீது பயத்தை ஏற்படுத்துதல்,பணம் சம்பாதித்தவனை ,சாதனை புரிந்தவன் என்று அறிமுகப்படுத்தி,அவனையே முன்மாதிரியாக எடுத்து சொல்லுதல், மதிப்பெண் எடுத்தவன்,மாதசம்பளத்தில் அமர்ந்தவன் தான் சாதித்தவன் என்று போலி முத்திரை கொடுத்து,இதில்,மட்டும் தான் வாழ்கையே உள்ளது போன்று மாயயை ஏற்படுத்தி,மற்ற மாணவர்களை சிந்திக்கவிடாமல் தாழ்வுமனப்பான்மையுடன் சிதைக்கச்செய்கிறார்கள்.

அடுத்து ஆசிரியர்கள்,இவர்கள் ஆசிரியர்கள் என்பதைவிட காசுக்காக வேலை செய்யும் கூலி தொழிலாளர்கள், ஏதோ படித்துவிட்டு,புத்தகத்தில் உள்ளதை வகுப்பறையில் வாசித்துக்காட்டுதல்,தேர்வு வைத்தல்,மதிப்பெண் போடுதல்,மாணவர்களின் குற்றங்களை வரிசைப்படுத்துதல்,உளவு பார்த்தல், நிர்வாகம் விடுத்துள்ள இலக்கை எட்டுதல்,போன்ற வேலைகளை செய்யும் மனித எந்திரம் போன்றவர்கள்,அவர்களை குறை சொல்லித்தப்பு இல்லை. அவர்களின் நிர்வாகம் அவர்களை அப்படி மாற்றியுள்ளது.

தனியார் கல்வி நிறுவனங்கள் இப்படி என்றால் அரசு நிறுவனங்கள் அதை விட மேல், கல்விக்காக ஒதுக்கப்பட்ட நிதி மற்ற துறையை விட குறைவு தான், அந்த நிதியும் கடைசிவரை போய் சேருவதில்லை என்பதுதான் பெரிய குறை,கழிப்பறை கட்டுவதுக்கு இரண்டு லட்சம் ஒதுக்கினால் அது இருபதுஆயிரத்தில் பயன்படாத கட்டிடமாக காட்சியளிகின்றது.ஆசிரியர்கள் கடமைக்காக,சம்பளத்துக்காக வேலை செய்கின்றனர்.சிலர் பகுதி வேலையாக செய்கின்றன.தங்களை நம்பி வந்த ஏழை குழந்தைகளுக்கு அறிவு கண்ணை துறக்காமல் குருடர்களாகவும், மூடர்களாகவும் மாற்றுகின்றார்கள்.இவர்களால்தான் அடிமட்ட மக்கள் என்றுமே அடிமட்டத்திலேயே உள்ளனர்.

ஆசிரியர் தேர்வு செய்யும் முறையே அலங்கோலமாக உள்ளது.ஒரு ஆட்சியில் மூப்பு அடிப்படையில் படித்ததை மறந்துபோன முதியவர்களுக்கு ஆசிரியர் வேலை.இன்னொரு ஆட்சியில் நல்லொழுக்கம் இல்லாமல், அறநெறிகள் அற்ற,மனித குணங்களை நல்லநெறிபடுத்தும் அறிவு இல்லாத,வெறும் புத்தகத்தில் உள்ள தகவல்களை சேமித்துக் கொண்டு தேர்வில் மதிப்பெண் எடுத்தவர்களுக்கு ஆசிரியர் வேலை.இதை விட சிலர் பணத்தின் மூலமும் வேலைக்கு வருகின்றனர்.இவர்களால் எப்படி அறநெறிகல்வி,அறிவியல்கல்வி,போன்றவற்றை கொடுக்க முடியும்?மாணவர்களை எப்படி நன்நெறி படுத்த முடியும்.எதிர்கால இந்தியா மாணவர்கள் கையில் உள்ளது,மாணவர்களின் எதிர்காலமோ இன்றைய ஆசிரியர்களின் கையில் உள்ளது.அனால் இன்றைய ஆசிரியர்களின் கையில் உள்ளதோ அவர் அவர்களின் சுகமான சுயநல வாழ்க்கை தான்.

கல்வி,விவசாயம்,சுகாதாரம்,இவற்றின் வளர்ச்சிதான் ஒரு நாட்டின் வளர்ச்சி என்பதை அறியாத அறிவு கெட்ட அரசியல் தலைவர்கள்,தான் புகழ் பெறவேண்டும்,ஆதிக்கம் செய்ய வேண்டும்,எல்லாவற்றையும் தனக்கு சொந்தம் ஆக்கிக்கொள்ள வேண்டும்,என்று தனிமனித சுயநலத்தால் ஆட்சிக்கு வர எது வேண்டுமானாலும் செய்கின்றனர், இலவசம், பணம்,கொலை,ஆள் கடத்தல்,கொள்ளை,போன்ற நாகரீகமற்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

அறிமுகம் இருந்தால் போதும் அறிவு இல்லை என்றாலும் சினிமா, மற்றும் பிற ஊடகங்கள் மூலம் பாமர மக்களிடத்தில், நல்லவர்கள், வல்லவர்களை போல் போலியாக நடித்து,அறிமுகமாகி.பின் அரசியலில் கால்பதித்து,ஆட்சிக்கு வந்துவிடுகின்றனர். இவ்வாறு வந்த கயவர்களுக்கு எப்படி தெரியும் கல்வியின் அருமை.எப்படி வருங்கால சமுதாயத்தை வளமாக்க தெரியும்,

தலைவன் சரியில்லை என்றால் சுற்றி உள்ள சமூகமும்,அழிவை நோக்கி செல்லும்.நல்ல தலைவர்களை தேர்ந்து எடுக்க பாமர மக்களிடத்தில் பகுத்தறிவு இல்லை,ஏனெனில் பகுத்தறிவை கொடுக்கும் கல்வி இல்லை.

பெற்றோர்களால் நல்ல நெறியில் வளர்க முடியாத,ஆசிரியர்களால் அறிவு மறுக்கப்பட்ட,அரசால் ஒதுக்கப்பட்ட குழந்தைகளிடம்,அரவணைத்து நெருங்கி பழகுகிறது,தொலைக்காட்சி, வலைத்தளம், சினிமா,மற்றும் செல்போன் போன்ற ஊடகங்கள்.இவை இரண்டு பக்கத்தை கொண்ட நானயங்களை போல, நல்லது கெட்டது,என இரண்டு பக்கத்தை கொண்டது.மாணவர்களிடத்தில் பகுத்தறிவு திறன் இல்லாததால்,கெட்ட விஷயங்கள் உள்ள பக்கத்தை மட்டும் எடுத்துக்கொள்கின்றனர்.ஏனெனில் அவைதான் அழகாக தெரியும்.இவ்வாறு தீய குணங்களுக்கு ஆட்கொள்ளப்பட்டவர்கள்,அந்த குணத்தை தன் நண்பர்கள் மூலம் அனைத்து மாணவர்களுக்கும் பரப்புகின்றனர்.நோய்கள் தான் பரவும் ஆரோகியம் பரவாது.

இன்று இளைய தலைமுறையை இடம் தெரியாமல் ஆக்குவதில் ஊடகங்கள் முதல் இடத்தில் உள்ளன.கார்ப்பிரேட் நிறுவனங்களின் விளம்பரங்கள் மாணவர்களிடத்தில் போலியான மதிப்பீடுகளை உருவாக்குகின்றன.சினிமா தயாரிப்பாளர்கள் தன் சுயலாபத்திற்காக எப்படிப்பட்ட படத்தையும் தயாரிக்கின்றனர்.நடிகர்கள் தன் அறிமுகத்துக்காக எந்த மாதிரி படத்திலும் நடிக்கின்றனர்.இன்று பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சினிமா கதாநாயகன் தான் குரு,வழிகாட்டி எல்லாம்.அவர்களை பின்பற்றி தான் நடை,உடை,பாவனை அனைத்தும். படத்தில் கதாநாயகன் செய்யும் நல்ல செயல்களை விட,கெட்ட செயல்களே, போலி அழகாகவும்,தற்காலிக சுகமாகவும் இருப்பதால்,அவையே மாணவர்களை அதிகம் பாதிக்கின்றன.இவை தான் மாணவர்களின் நாகரீக வளர்ச்சி,பண்பாடு, கலாச்சாரம்,போன்ற அனைத்தும்.

அடுத்து தொலைக்காட்சி,உண்மை சம்பவங்களின் நிகழ்ச்சி (பாட்டு,நடனம் ) என்று சொல்லி மாணவர்களிடையே போட்டிகளை வைத்து அவர்களின் உணர்சிகளை ஒளிபரப்பி பணம் சம்பாதிகின்றன.

இன்டர்நெட், செல்போன் ,இவைகள் தான் இன்றைய நவீன உலகில் மாணவர்களின் கையில் கிடைத்த மந்திரக்கோல். உடலையும்,மனதையும், வலிமை படுத்தும் அனைத்து விளையாட்டுகளும் அடிப்பட்டு போய்விட்டன. போலி புத்துணர்ச்சி கொடுக்கும்,செல்போன் மற்றும் கம்ப்யூட்டரில்,கற்பனையில் விளையாடுகின்றனர். காதல்,காமம்,இவற்றின் உண்மைநிலையை உணர்த்தும்,வீட்டுச்சூழ்நிலை மற்றும் கல்விச்சூழ்நிலை பயனற்று உள்ளதால்.அதை பற்றி மாணவர்களிடத்தில் தவறான தகவல்களை பரப்பி வருகிறது ஊடகச்சூழ்நிலை.இதனால் மாணவர்கள் காதல்,காமம், இவற்றில் தவறான பாதையில் சென்று சமூக சீர்கேடுகளில் ஈடுபடுகின்றனர்.இதற்கு செல்போனும்,கம்ப்யூட்டர்ரும், இண்டர்நெட்டும் பேருதவியாக உள்ளன. மற்றும் கொலை,கொள்ளை சம்பவங்களுக்கும் பயன்படுகின்றன.நல்லொழுக்கங்களை கற்றிருந்தால் தானே அவற்றை நல்ல செயல்களுக்கு பயன்படுத்த முடியும்.

இவ்வாறு சீர்கெட்ட சூழ்நிலையில் வளரும் குழந்தைகள் அன்பு, பாசம், நல்லொழுக்கம், தன்னம்பிக்கை,விட்டுக்கொடுக்கும் மனம், சகிப்புத்தன்மை, சுயதூய்மை,விடாமுயற்ச்சி,விவேகம்,விருந்தோமல்,வீரம்,விசுவாசம்,சிந்தனை, பகுத்தறியும் ஆற்றல், போன்ற நல்ல நெறிகளில் பலவற்றை கைவிடப்பட்டு.

மன அழுத்தம் ,பொறுமை இன்மை ,சகித்துக்கொள்ள முடியாமை, தாழ்வுமனப்பான்மை,போலி கவுரவம்,பழிவாங்கும் குணம், கொலை வெறி, சோம்பல், போன்ற கெட்டநெறிகளை கடைபிடிக்கப்பட்டு. சீரழிந்துகொண்டு இருக்கின்றன,மாணவ சமுதாயம்.

இன்று செய்தித்தாள்களை எடுத்தால்,தினமும் மாணவர்களின் செய்தி தான்.அதாவத,தற்கொலை,கொலை,வன்முறை,ஆபாச ம்,பொருந்தாதகாம ம்,
பலாத்காரம்,இவற்றில் ஈடுபடும் மாணவர்களைப்பற்றிதான்.இவற்றை எல்லாம் பார்க்கும்போது இத்தகைய மாணவர்களை உருவாக்கிய சூழ்நிலையை குற்றவாளி கூண்டில் ஏற்ற வேண்டும் என்று மனம் துடிக்கிறது,சமூகத்தில் நஞ்சு பரப்பி கொண்டிருப்பவர்களை தண்டிக்க வேண்டும் என இரத்தம் கொதிக்கிறது.
இன்றைய மாணவர்கள் நாளைய சமுதாயம்,
நாளைய சமுதாயத்தை உருவாக்கும்,
இன்றைய சமுதாயத்தை நல்வழிபடுத்தினால்தான்,
மனித சமூகம் நிலைக்கும்.
எனவே,சமுதாயத்தை சீர்படுத்துவது,காப்பது,நெறிப்படுத்துவது,போன்றவை,
நாம் தான் செய்ய வேண்டும்.
ஏனெனில்,நாம் தான் இன்றைய சமூகம் என்பதை மறக்கக்கூடாது.